மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி

மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி

எழுதியபடி வாழ்ந்தவன்
வாழ்ந்தபடி எழுதியவன்
மகாகவி பாரதி !

புதுமைக்கும் மரபுக்கும்
பாலம் அமைத்தவன்
மகாகவி பாரதி !

விடுதலை விதையை
விருட்சமாக வளர்த்தவன்
மகாகவி பாரதி !

மற்றவரை மதித்தவன்
சுயமரியாதை மிக்கவன்
மகாகவி பாரதி !

வறுமையிலும் செம்மை
ஏழ்மையிலும் நேர்மை
மகாகவி பாரதி !

பா ரதம் செலுத்திய
பாக்களின் சாரதி
மகாகவி பாரதி !

பெண் விடுதலைக்கு
போர்முரசு கொட்டியவன்
மகாகவி பாரதி !

வாழ்வில் ஆசைப்பட்டவன்
பேராசைப்படாதவன்
மகாகவி பாரதி !

மூடப் பழக்கங்களுக்கு
மூடு விழா நடத்தியவன்
மகாகவி பாரதி !

பகுத்தறிவைப் பயன்படுத்தி
பாடல்கள் புனைந்தவன்
மகாகவி பாரதி !

அழியாத பாடல்கள்
அகிலத்திற்கு வழங்கியவன்
மகாகவி பாரதி !

வெள்ளையர்களை விரட்டிய
காரணிகளில் ஒன்றானவன்
மகாகவி பாரதி !

வாழ்ந்த காலம் முப்பத்தொன்பது
பாடல்களின் காலம் பல நூற்றாண்டு
மகாகவி பாரதி !

மொழிகள் பல பயின்றவன்
தமிழே சிறப்பு அறிவித்தவன்
மகாகவி பாரதி !

.
மகாகவி பாரதி கண்ட விடுதலை ! கவிஞர் இரா .இரவி !

அடையும் முன்பே அடைந்து விட்டோம் என்று !
அன்றே ஆனந்த கூத்தாடியவன் பாரதி !

இன்று இங்கு இருந்திருந்தால் பாரதி !
ஏன் ? பெற்றோம் என்று நொந்து இருப்பான் !

வெள்ளையனே வெளியேறு என்றான் அவன் !
வெள்ளையனே கொளையடிக்க வருக ! என்றானது !

பன்னாட்டு நிறுவனங்கள் வேண்டாம் என்றான் அன்று !
பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளைகள் இன்று !

குடிக்கும் தண்ணீர் பொதுவாக இருந்தது அன்று !
குடிக்கும் தண்ணீர் விலைக்கு விற்கின்றனர் இன்று !

மலைகளை ரசித்துப் பாடல் பாடினான் அன்று !
மலைகளை வெட்டி பல நாடுகள் கடத்தினர் இன்று !

சிட்டுக் குருவிகளுக்கு அரிசியிட்டு மகிழ்ந்தான் அன்று !
சிட்டுக் குருவிகளைக் கூண்டோடு ஒழித்தனர் இன்று !

ஆறுகளையும் மணல்களையும் பாடினான் அன்று !
ஆறுகளையும் மணல்களையும் காணவில்லை இன்று !

பெண் விடுதலை வேண்டும் உரக்கப் பாடினாய் அன்று !
பெண் உயிர் எடுத்து விடுதலை தருகின்றனர் இன்று !

அடிமை விலங்கை அடித்து நொறுக்கினான் அன்று !
அடிமை விலங்கை வாங்கிப் பூட்டினர் இன்று !

காக்கை குருவி எங்கள் சாதி என்றான் அன்று !
காக்கை போல தமிழரைச் சுடுகிறான் இன்று !

சேதுவை மேடாக்கி பாலம் கட்டப் பாடினான் அன்று !
சேது கடல் திட்டத்தையே கை கழுவினர் இன்று !

தமிழ்மொழி இனிய மொழி என்றான் அன்று !
தமிழ்க்கொலை நடக்கிறது ஊடகத்தில் இன்று !

உயிருக்கு மேலாக தமிழை நேசித்தான் அன்று !
உயிர்கள் போனது ஈழத்தில் தமிழால் இன்று !

இந்தியாவை இந்தியர் ஆள விரும்பினான் அன்று !
இந்தியாவை வல்லரசுகள் ஆள்கின்றனர் இன்று !

இந்தியாவே முடிவுகள் எடுக்க விரும்பினான் அன்று !
இந்திய அமைச்சரை அமெரிக்கா முடிவு செய்கிறது இன்று !

காணி நிலம் வேண்டும் என்று பாடினான் அன்று !
காணி நிலம் எங்கும் கெயில் குழாய் பதிக்கின்றனர் இன்று !
.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை என்றான் அன்று !
உழவும் தொழிலும் சிதைந்து வழக்கொழிந்தது இன்று !

பஞ்சம் பட்டினி ஒழிய வேண்டும் என்றான் அன்று !
பஞ்சம் பட்டினி தலை விரித்து ஆடுகின்றது இன்று !

அச்சமில்லை அச்சமில்லை என்று பாடினான் அன்று !
அச்சமின்றி யாருமில்லை என்றானது இன்று !

புதிய ஆத்திச்சூடி பாடி புத்துணர்வு தந்தான் அன்று !
புதிய தலைமுறை ஆத்திச்சூடி அறியவில்லை இன்று !

திருவள்ளுவரை உலகிற்கு தந்த தமிழ்நாடு என்றான் அன்று !
திருக்குறளை தேசிய நூலாக்க மறுக்கின்றனர் இன்று !

கவிதை எழுதியபடி கவிதையாகவே வாழ்ந்தான் அன்று !
கவிதை எழுதுவோர் எழுதியபடி வாழவில்லை இன்று !

அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினாய் அன்று !
அன்பு என்றால் என்னவென்றுதெரியவில்லை இன்று !

மகாகவி பாரதி கண்ட விடுதலை இது இல்லை !
மகாகவி பாரதி இருந்தால் நொந்து இருப்பான் உண்மை !

எட்டயபுரத்து பாரதி இன்று இருந்திருந்தால்

எட்டயபுரத்து பாரதி இன்று இருந்திருந்தால்
எரிமலையாய் வெடித்து இருப்பான் ஈழத் தமிழருக்காக

இனிமையான மொழி தமிழ் பேசியதற்காக
இனத்தையே கொடுரம் கண்டு கொதித்திருப்பான்

இலங்கை தீவிற்கு பாலம் கட்டப்பாடியவன்
இலங்கைத்தமிழர் நிலைக்கு ரத்தக் கண்ணீர் வடித்து இருப்பான்

படுகொலைகளை தடுக்காத பாதகர்களின்
முகத்தில் காரி உமிழ்ந்திருப்பான்

முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் என்று பாராமல்
மூர்க்கத் தனமாக அழித்த மூடத்தனத்தை முறியடித்திறுபபான்

இன வெறி பிடித்த சிங்களக் காடையர்களை
எட்டி உதைத்து புத்தி புகட்டி இருப்பான்

மனித நேயமற்ற பன்னாட்டுப் படைகளுக்கு
மனிதநேயத்தை பாட்டாலே போதித்து இருப்பான்

ஈழத் தமிழர் விடுதலையை பாரதி
பாட்டாலே பெற்றுத் தந்து இருப்பான்

உலக மனிதர்கள் யாவரும் குற்றவாளிதான்
ஒரு இனத்தின் அழிவை வேடிக்கைப் பார்த்ததால்

கொத்துக் கொத்தாக கொத்துக் குண்டு போட்டு
கொல்கிறான் எனத்தெரிந்தும்தெரியாதது போல

இருந்த குற்றவாளிகள் நாம்

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.com

http://www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

Advertisements

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள்

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

தெய்வப் பாடல்கள் – நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?