திருச்சிற்றம்பலம்,

நீ வழிபடும் கடவுளைத் தவிர, வேறு எதனிடமும் மனம் ஈடுபடாத விதத்தில் பார்த்துக் கொள்வதே பெரிய சாதனை. கடவுளைத் தேடி எங்கும் ஓட வேண்டாம். முதலில் உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய். நிச்சயம் கடவுளே உன்னை நாடி வந்து விடுவார். உலக நடப்பையே ஒரு நாடகமாக பார்த்து வா. உன்னிடத்திலுள்ள பேதம் அனைத்தும் நீங்கி விடும். அனைவரும் நல்லவர்களாகத் தோன்ற ஆரம்பிப்பார்கள். பிறர் மெச்சுவதற்காக தர்மம் செய்யக் கூடாது. மனசாட்சியின் படி தர்மத்தில் ஈடுபடுவதே மன அமைதிக்கான வழி.
மனதில் சஞ்சலம் கொண்ட மனிதன் எப்போதும் வேதனையில் சிக்கித் தவிக்க நேரிடும். யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு மறைவில் இருந்த படி பாவத்தைச் செய்யாதே. கடவுள் எப்போதும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். மனத்தூய்மை மிக்க நல்லவர்களிடம் நட்பு கொள். அதனால் அருட்சக்தியை எளிதாக உணரும்
பாக்கியம் பெறுவாய். கடவுள் என்னும் சத்தியத்தை நம்பி இருப்பவன் இருக்குமிடமே சொர்க்கமாகி விடும். கடமையைச் செய்ய மறுக்காதே. பொறுப்பை வெறுப்பது கடவுளை வெறுப்பதற்குச் சமம்.

வெற்றி பெற வேண்டுமானால், யார் மீதும் கோபமோ, பொறாமையோ கொள்வது கூடாது. உன்னை நீயே அறிந்து கொள்ள முற்படு. இதனால், துன்பம் அகலுவதோடு எல்லா இன்பமும் உண்டாகும். மனத்தூய்மை, அன்பு, நேர்மை, பொறுமை என எல்லா நல்லெண்ணங்களும் மனிதனுக்கு மிக அவசியமானவை. எப்போதும் முழுமனதுடன் பணியாற்றிக் கொண்டிரு. சோம்பேறித்தனத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து விடு. உலகில் உனக்குத் துணையாக இருப்பவர் கடவுள் ஒருவர் மட்டுமே. அவரைத் தவிர வேறு யாரும் உனக்கில்லை. அவன் எல்லாம் அறிந்தவன். நமக்கு மேலே இருப்பவன் அவன் மட்டுமே. அவனை உறுதியாக நம்பினால் நிச்சயம் நன்மை உண்டாகும். பெரும் பகைவர்களான மண், பெண், பொன், புகழ் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கடமையை மட்டும் செய்து கொண்டிரு. யாருக்கும் மனதறிந்து தீங்கு நினைக்காதே. செய்யும் துரோகம் உன்னை நீயே கெடுத்துக் கொள்ளும் செயல் தான். பணிவுடன் அனைவரையும் வணங்கு.

சிரத்தையும், ஆர்வமும் கொண்டவனாக இரு. விசுவாசம் மனதில் நிலைத்திருக்கட்டும். முன்னோரின் வார்த்தைகளை பூரணமாக நம்பி விடு.  முட்டாள்தனமாக உன்னை நீயே பெரியவனாக எண்ணிக் கொண்டு கர்வப்பட வேண்டாம். எத்தனையோ பணக்காரர்கள், மேதாவிகள் பூமியில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே. விருப்பும், வெறுப்பும் உன்னைக் கெடுக்கும் எதிரிகள் என்பதை மறந்து விடாதே. ஞானிகள் ஒருபோதும் விருப்பு வெறுப்பு கொள்ள மாட்டார்கள். தங்கத்தைத் தேடிஅலையாதே. சத்தியம், தர்மம் போன்ற உயர்பண்புகளை வளர்த்துக் கொண்டு மனதை மாசற்ற தங்கமாக ஆக்கிக் கொள். அரிய மனிதவாழ்வு மூலம் சாதனை படைத்து விடு. – சாந்தானந்தர்

Advertisements